4894. | இகழ்வுஅரும்பெரும் குணத்து இராமன் எய்ததுஓர் பகழியின்செலவுஎன, அனுமன் பற்றினால், அகழ்புகுந்துஅரண்புகுந்து இலங்கை, அன்னவன் புகழ்புகுந்துஉலாயது ஓர் பொலிவும் போன்றதே. |
(வெள்நிலா) அனுமன்பற்றினால் - அனுமனின் தொடர்பால்; இகழ்வு அரும் - பழிக்கப்படுதல் இல்லாத; பெருங்குணத்து - சிறந்த பண்புகளைப் பெற்ற; இராமன் எய்தது - இராமபிரானால் ஏவப் பெற்ற; ஓர் பகழியின் செலவு என - ஒப்பற்ற அம்பின் பயணம் போல; அன்னவன் புகழ் - அந்த இராமபிரானின் புகழானது; அகழ் புகுந்து - அகழி கடந்து புகுந்தும்; இலங்கை புகுந்து - இலங்கை மாநகருக்குள்புகுந்தும்; உலாயது - பரவியதாகிய; ஓர் - ஒப்பற்ற; பொலிவு போன்றது - விளக்கம் போன்றிருந்தது. (வெண்நிலவு)அனுமன் தொடர்பால் இராமபிரான் புகழ் அகழ் முதலான இடங்களில் அவன் ஏவும் அம்புபோல் பரவியது. மேற்பாட்டில்கூறப்பெற்ற வெண்நிலவின் ஒளி இப்பாட்டிலும் பேசப்படுகிறது. பொலிவும் - இதில் உள்ள உம் - அசை. பகழியின் செலவை அனுமனுக்கு ஏற்றிக் கூறுவாரும் உளர். ஏற்பின் கொள்க. 'செலவு என' என்னும் தொடரை ஆய்க. ஏ.அசை. (60) |