அனுமன் மதில்கண்டு வியத்தல்

4895.

அவ்வழிஅனுமனும், அணுக லாம்வகை
எவ்வழி என்பதைஉணர்வின் எண்ணினான்;
செவ்வழிஒதுங்கினன், தேவர் ஏத்தப் போய்
வெவ்வழிஅரக்கர் ஊர் மேவல் மேயினான்.

     அனுமன் - அனுமன்; அவ்வழி - அந்தச் சமயத்தில்; அணுகல் ஆம்
வகை -
இலங்கையில் நுழையும் முறை; எவ்வழி என்பதை - எந்தமுறை
என்பதை; உணர்வின் எண்ணினான் - அறிவினால் ஆராய்ந்து (பிறகு);
செவ்வழி - (இலங்கைக்கு அமைந்த) நேரான வழியில் செல்லாமல்;
ஒதுங்கினன் - விலகினவனாய்; தேவர் ஏத்த - தேவர்கள் கொண்டாட;
போய் - வேறுவழியாகச் சென்று; வெவ்வழி - கொடிய வழியில் செல்லும்;
அரக்கர் ஊர் - அரக்கருடைய இலங்கையை; மேவல் மேயினான் -
அடைய முற்பட்டான்.

     இலங்கையில்எம்முறைப்படி செல்வது என்பதை ஆராய்ந்த அனுமன்
(அரக்கர்கள் அமைத்த) செவ்வழியில் போகாமல் வேறு வழியாகச் சென்றான்.
வால்மீகம், அனுமன் வழியில்லா இடத்தில் பிரவேசித்தான் என்று கூறும் (சுந்த
4 சர்க்கம் 1)                                             (61)