கலிவிருத்தம் 4896. | ஆழிஅகழாக, அருகா அமரர் வாழும் ஏழ் உலகின்மேலைவெளி காறும், முகடேறக் கேழ் அரியபொன்கொடு சமைத்த, கிளர்வெள்ளத்து ஊழிதிரி நாளும்உலையா மதிலை உற்றான். |
(அனுமன்) ஆழி அகழ் ஆக -கடலையேஅகழாகக் கொண்டு; அருகா - அழியாத; அமரர் வாழும் - தேவர்கள் வாழ்கின்ற; ஏழ் உலகின் - ஏழு உலகங்களுக்கும்; மேலை வெளிகாறும் - மேலே உள்ள வெட்ட வெளி வரையிலும்; முகடு ஏறி - உச்சியானது உயர்ந்து சென்று; கேழ் - ஒளியுடைய; அரிய பொன் கொடு - சிறந்த பொன்னைக் கொண்டு; சமைத்த - அமைக்கப் பெற்ற; கிளர் வெள்ளத்து - சீறுகின்ற வெள்ளப் பெருக்கால்; ஊழி - யுகமானது; திரிநாளும் - மாற்றம் அடைகின்ற காலத்திலும்; உலையா மதிலை - வேறுபாடடையாத மதிலை; உற்றான் - அடைந்தான். ஏழ் உலகின் -இன் - அசை. மருள் நோக்கு என்பதைத் தேவர் மருளின் நோக்கு என்றார். நச்சர். இன் 'அசை' என்றார். (சிந்தா - 2290) மா - காய் - காய் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும் (மணிமலர் 76). (62) |