4899. | மடங்கல்அரியேறும், மதமால் களிறும், நாண நடந்து தனியேபுகுதும் நம்பி, நனிமூதூர் அடங்குஅரிய தானைஅயில் அந்தகனது ஆணைக் கடுந்திசையின்வாய்அனைய-வாயில்எதிர்கண்டான். |
மடங்கல்(உம்) -ஊழித்தீயும்; அரியேறும் - ஆண்சிங்கமும்; மதம் - மதங்கொண்ட; மால்களிறும் - பெரிய யானையும்; நாண - வெட்கமடையும்படி; தனியே - தனியாக; நனிமூதூர் - பழமையான இலங்கைக்குள்; நடந்து புகுதும் நம்பி - நடந்து புகும் அனுமன்; அடங்கு அரிய - பிறருக்கு அடங்காத; தானை - சேனையையும்; அயில் - சூலாயுதத்தையும் (பெற்ற); அந்தகனது - யமனுடைய; ஆணை - கட்டளைகள் நிறைவேற்றப்படும்; திசையின் - தெற்குத் திசையின்; கடும் வாய் அனைய - கொடுமை மிக்க வாய்போன்ற; வாயில் - (இலங்கையின்) கோபுரவாயிலை; எதிர்கண்டான் - கண் எதிரில் பார்த்தான். மடங்கல் -ஊழித்தீ. 'கொழுந்துவிட்டு அழன்று எரி மடங்கல்' (கம்ப. 7727). மடங்கலும் என்பது மடங்கல் என வந்தது 'உம்மைத் தொகை'. (65) |