4900. | மேருவை நிறுத்தி வெளி செய்தது கொல் ? விண்ணோர் ஊர்புக அமைத்தபடுகால்கொல் ? உலகு ஏழும் சோர்வு இலநிலைக்க நடுஇட்டது ஒரு தூணோ ? நீர்புகு கடற்குவழியோ என நினைந்தான். |
(கோபுர வாயில்) மேருவை - மகாமேரு மலையை;நிறுத்தி - (கோபுரமாக) நட்டுவைத்து (பிறகு); வெளிசெய்ததுகொல் - (அதில்) இடையில் வெளியமைக்கப்பட்டதோ ? (கோபுரம்) விண்ணோர் - (பணி செய்து முற்றிய) தேவர்கள்; ஊர்புக - தங்கள் ஊரை அடைவதற்காக; அமைத்த படுகால் கொல் - அமைக்கப் பெற்ற ஏணியோ? உலகு ஏழும் - ஏழு உலகங்களும்; சோர்வில நிலைக்க - சிதைவற்றனவாய் நிலைத்திருக்க; நடு - (உலகின்) நடுப்பகுதியில்; இட்டது ஒருதூணோ - நாட்டப்பெற்ற ஒப்பற்ற தூணோ ? (வாயில்) கடற்கு - கடலின்கண்; நீர்புகு வழியோ - வெள்ளம் புகுவதற்கு (முன்னம்) அமைக்கப்பட்ட வழியோ; என - என்று பலவிதமாக; நினைத்தான் - (அனுமன்) எண்ணினான். (66) |