அனுமன் வாயில்காவலை வியத்தல்

4902.

வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடைவீரர்
கள்ளவினைவெவ்வலி அரக்கர், இரு கையும்
முள்எயிறும்வாளும்உற, முன்னம்முறை நின்றார்
எள்அரியகாவலினை அண்ணலும் எதிர்ந்தான்.

     ஒரு நூறொடு இரு நூறுவெள்ளம் - முந்நூறு வெள்ளச்சேனையாக;
மிடை - (வாயிலில்) நெருங்கிய; வீரர் - வீரர்களாகிய; கள்ளவினை - பிறர்
பொருளைக் கவரும் தொழிலும்; வெவ்வலி அரக்கர் - கொடிய வலிமையும்
உடைய அரக்கர்கள்; இரு கையும் - (வாயிலின்) இருபுறத்திலும்; முள்எயிறும்
-
முள்போன்ற பற்களும்; வாளும் - வாளாயுதமும்; உற - பொருந்த;
முன்னம் முறை நின்றார் - முற்படத் (தம்) தகுதிக்கேற்ப நின்று
கொண்டுள்ளாரது; எள்அரிய - பிறரால் அவமதிக்க முடியாத; காவலினை -
பாதுகாப்பை; அண்ணல் எதிர்ந்தான் - பெருமைமிக்க அனுமன் கண்டான்.
                                                      (68)