4904.

அங்குசம்,நெடுங்கவண், அடுத்து உடல் விசிக்கும்
வெங்குசையபாசம், முதல் வெள்ள பயில் கையர்;
செங்குருதிஅன்னசெறி குஞ்சியர், சினத்தோர்
பங்குனி மலர்ந்துஒளிர் பலாசவனம் ஒப்பார்.*

     செங்குருதி அன்ன- சிவந்தஇரத்தம் போன்ற; செறி குஞ்சியர் -
அடர்ந்த தலைமயிரை உடையவர்களும்; சினத்தோர் - கோபம்
உடையவர்களும்; பங்குனி மலர்ந்து - பங்குனி மாதத்திலே பூத்து; ஒளிர் -
(இலையின்றி) ஒளி வீசுகின்ற; பலாசவனம் ஒப்பார் - புரசங்காட்டிற்கு
ஒப்பானவர்களுமான அரக்கர்கள்; அங்குசம் - மாவெட்டி; நெடுங்கவண் -
நீண்ட தூரத்தில் கல் எறியும் கவண்; அடுத்து - பகைவரைச் சார்ந்து; உடல்
விசிக்கும் -
உடலைப் பிணிக்கும்; வெம்குசைய - வெவ்விய கடிவாளம்
போன்ற; பாசம்முதல் - பாசம் முதலான; வெய்ய -கொடிய ஆயுதங்கள்;
பயில்கையர் - பழகிய கைகளை உடையவராய் இருந்தனர்.

     பலாச வனம்போல் சிவந்த தலைமயிரை உடைய அரக்கர்கள் அங்குசம்
முதலான படைக்கலங்களை ஏந்தியவராய் இருந்தனர்.

    குசை - கடிவாளம்.இதற்குத் தருப்பை என்றும், கச்சு என்றும் பொருள்
கூறப் பெற்றது. தருப்பைபோல் அறுக்கவல்ல பாசம் என்று விளக்கம்
பேசப்பட்டது. குசைய - கடிவாளம் போன்ற - அ. அசை. ஆளி போல்
மொய்ம்பு என்றார் - நச்சர் - அ - அசை என்றார் (சிந்-517)         (70)