4905. | அளக்கஅரிதுஆகிய கணக்கொடு அயல்நிற்கும் விளக்குஇனம்இருட்டினை விழுங்கி ஒளிகால உளக்கடிய காலன்மனம் உட்கும் மணிவாயில் இளக்கம்இல்கடற்படை இருக்கையை எதிர்ந்தான். |
அளக்க - அளந்துகாண்பதற்கு; அரிது ஆகிய - கடினமாக உள்ள; கணக்கொடு - கூட்டத்துடன்; அயல் நிற்கும் - பக்கத்தே நிற்கின்ற; விளக்குஇனம் - விளக்குக் கூட்டம்; இருட்டினை விழுங்கி - இருளை உட்கொண்டு;ஒளிகால - வெளிச்சத்தை வெளிப்படுத்த (அதனால்); கடிய உளக்காலன் -கடினமான உள்ளமுடைய யமனின்; மனம்உட்கும் - மனமும் பயப்படும்படியான; மணிவாயில் - மணிகள் பதிக்கப் பெற்ற கோபுரவாயிலின் கண் உள்ள; இளக்கம் இல் - தளர்ச்சியில்லாத; கடற்படை இருக்கையை - கடல்போன்ற படைகளின் இருப்பிடத்தை; எதிர்ந்தான் - எதிரே கண்டான். இரவினில் வந்துஉயிர்க்குலத்தினை அழிக்கும் காலன் ஒளி வாயிலைக் கண்டு அஞ்சினான் போலும் (பாரதி தந்த பிச்சை) சந்திரன் கீழ் வானில் இருப்பதால் நகரில் இருள் சூழ்ந்தது. அதனால் விளக்கு இருளை விழுங்கிற்று என்றார் கவிச்சக்கரவர்த்தி. (71) |