4908.

வாயில்வழிசேறல்அரிது; அன்றியும் வலத்தோர்;
ஆயில், அவர்வைத்தவழி ஏகல் அழகு அன்றால்;
காய்கதிர்இயக்குஇல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந்நகர்புக்கிடுவென், என்று ஓர்
                              அயல்போனான்.

     ஆயில் - ஆராய்ந்தால்; வாயில்வழி - இந்தக் கோபுர வாயிலின்
வழியே; சேறல் அரிது - செல்வது கடினமானதாகும்; அன்றியும் -
அல்லாமலும்; அவர் வைத்த வழி - அவர்கள் அமைத்த வழியில்; ஏகல் -
செல்வது; வலத்தோர் - (எம்போல்) வலிமை யுடையவர்களுக்கு; அழகு
அன்று -
சிறப்பான செயல் அன்று (ஆதலினாலே); காய்கதிர் இயக்கு இல் -சூரியன் இயக்கம் இல்லாத (உயர்ந்த); மதில் - மதிலை; கடிது தாவிப்
போய்-
வேகமாகக் கடந்துசென்று; இந் நகர் புக்கிடுவென் - இந்த
நகருக்குள் புகுவேன்; என்று - என்று கருதி; ஓர் அயல் போனான் - ஒரு
பக்கத்தில் சென்றான்.

     என்று ஓர் அயல்போனான் - இதில் உள்ள 'ஓர்' அசை கோவலன்
கூறும் கட்டுரை என்பதை அடிகள் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை
என்றார். உரை வகுத்த நல்லார், 'ஓர்' இடைச்சொல் என்றார். ஆய்க. ஒரு
என்னும் சொல் பெயர் அன்று (ஒரு என்பது அசைச்சொல்லாகவே வழங்கப்
பெறுகிறது. நீ மனிதனா என்பதை நீ ஒரு மனிதனா என்பர்)        (74)