5512. | அறவனும்அதனை அறிந்தான்; அருகினில் அழகின் அமைந்தார் இற இனின் உதவுநெடுந் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்; உற வரு துணைஎன அன்றோ, உதவிய அதனை உவந்தான்; நிறை கடல்கடையும் நெடுந் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான். |
அறவனும் -அறவடிவினனான அந்த அனுமனும்; அதனை அறிந்தான் - அரக்கர்கள் நெருங்கி வந்து படைகள் வீசுவதை அறிந்து; அருகினில் அழகின் அமைந்தார் - தனது பக்கத்தில் சிறப்பாக வந்து பொருந்திய அரக்கர்கள்; இற, இனின் உதவு நெடுந்தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் - இறப்பதற்கு, இனிமையாக உதவக் கூடிய நீண்ட ஒழுங்கான மேன்மையுற்ற மரம் ஒன்றைத் தனது கையில் எடுத்தான்; உற வரு துணை என அன்றோ - மனத்திற்கு ஏற்ப உதவி செய்ய வருகின்ற ஒரு துணைவனைப் போல அல்லவா இது உள்ளது என்று; உதவிய அதனை உவந்தான் - தக்க சமயத்தில் உதவுமாறு கிடைத்த அம்மரத்தை விரும்பிக் கொண்டவனாய்; நிறை கடல் கடையும் நெடுந்தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் - பால் நிறைந்த கடலைக் கடைதற்குரிய பெரிய அடியை உடையமந்தர மலையைப் போல அரக்கர் நடுவில் ஓங்கி எழுந்தான். அரக்கர் கடலைக்கலக்கப் போவதால் மந்தர மலை அனுமனுக்கு உவமை ஆயிற்று. (24) |