4916.

ஆகாசெய்தாய் ! அஞ்சலை போலும் ?
                           அறிவுஇல்லாய்!
சாகாமூலம் தின்றுஉழல்வார்மேல் சலம் என்னாம் ?
பாகு ஆர்இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே,
போகாய் என்றாள் - பொங்கு அழல் என்னப்புகை
                              கண்ணாள்.

     பொங்கு அழல்என்ன - மூண்டு எரிகின்ற நெருப்பைப் போல; புகை
கண்ணாள் -
புகையும் கண்களையுடைய இலங்கைத்தேவி; (அனுமனை
நோக்கி) அறிவு இல்லாய் - அறிவற்ற பேதையே; ஆகா செய்தாய் -
செய்யத் தகாதவற்றைப் புரிந்தாய்; அஞ்சலை - நீ சிறிதும் பயப்படவில்லை;
சாகா மூலம் தின்று -
இலைகளையும் கிழங்குகளையும் தின்று; உழல்வார்
மேல் -
திரிகின்ற அற்பக்குரங்குகள் மேல்; சலம் என்னாம் - கோபம்
கொள்வதால் என்ன பயன்; பாகு ஆர் - சுண்ணக்குழம்பு பூசப்பெற்ற;
இஞ்சிப் பொன்மதில் - கோட்டையொடு கூடிய மதிலை; தாவிப் பகையாதே- கடந்து சென்று (என்னுடன்) பகைத்துக் கொள்ளாதே; போகாய்
-
ஓடிப்போவாயாக; என்றாள் - என்று கூறினாள்.

     சாகம் - இலை.'அருந்தவத்தின் சாகம் தழைத்து' (கம்ப. 1671)
பகையாதே போகாய் - பகையாமல் செல்க, என்றும் கூறலாம். பகையாதே
என்பது ஏவலாகவும் எதிர் மறைப் பெயர் எச்சமாகவும் வரும்.                                                   (82)