4923. | இற்றுச்சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள் மற்றும் தெய்வப்பல்படை கொண்டே மலைவாளை உற்றுக் கையால்ஆயுதம் எல்லாம் ஒழியாமல் பற்றிக்கொள்ளா விண்ணில் எறிந்தான், பழிஇல்லான்.* |
சூலம் - அனுமன் மேல் ஏவியசூலப்படை; இற்று - முறிந்து; (அதனால்) நீறு எழல் காணா - புழுதி கிளம்புவதைப் பார்த்து; எரி ஒப்பாள்- நெருப்பைப் போன்று சீறி; மற்றும் - பிறகும்; பல்தெய்வப் படைகொண்டு - பலவிதமான தெய்வீகப்படைகளைக் கொண்டு; மலைவாளைஉற்று - போர் செய்யும் இலங்கைத் தேவியை அணுகி; பழிஇல்லான் -பழியற்றவனாகிய அனுமன்; கையால் - தன்னுடைய கைகளால்; ஆயுதம்எல்லாம் - எல்லா ஆயுதங்களையும்; ஒழியாமல் - தப்பாமல்; பற்றிக் கொள்ளா -கவர்ந்துகொண்டு (அவள் மேல் வீசாமல்); விண்ணில்எறிந்தான் - ஆகாயத்தில் வீசி எறிந்தான். சூலம் பொடியாகிஅதனால் புழுதி எழுவதைக் கண்டு நெருப்புப் போற் சினங் கொண்டு இலங்கைத் தேவி வேறு படைகளைக் கொண்டு போரிட அனுமன் அவள்போர்க்கு வராதபடி ஆயுதங்களைப் பறித்து விண்ணில் எறிந்தான். நீறு - சூலம்முறித்த அதிர்ச்சியால் உண்டான புழுதி. சூலம் இற்றதே அன்றிப் பொடியாகவில்லை. 'பழி ஓர்வான்'என்று பாடம் கொண்டு பெண்ணைக் கொல்வதால் உண்டாம் பழியை நினைத்துப் படைக்கலங்களை விண்ணில் எறித்து அவளைக் கொல்லாது விட்டான் எனல் சிறப்புடைத்து. (89) |