இலங்கையுள்அனுமன் புகுதல்

 4930.

வீரனும்விரும்பி நோக்கி
    மெய்ம்மையே; விளைவும் அஃது என்று
ஆரியன் கமலபாதம்
     அகத்து உறவணங்கி ஆண்டு, அப்
பூரியர் இலங்கைமூதூர்ப்
    பொன்மதில் தாவிப் புக்கான்-
சீரிய பாலின்வேலைச்
    சிறுபிரைதெறித்தது அன்னான்.

     வீரனும் -வீரனாகியஅனுமனும்; விரும்பி நோக்கி - (இலங்கைத்
தேவியை) அன்புடன் பார்த்து; மெய்ம்மையே - நீ கூறியது சத்தியமே;
விளைவும் அஃது -  நிகழப் போவதும் அதுதான்; என்று - என்று கூறி;
ஆண்டு -அவ்வமயத்தில்; அ - அது; ஆரியன் - ஏற்றமுடைய
இராமபிரானின்; கமலபாதம் - தாமரை போன்ற பாதங்கள்; அகத்து உற -
உள்ளத்தே காட்சிவழங்க; வணங்கி - தொழுது; பொன் மதில் -
பொன்னால் அமைந்த மதிலை;தாவி - கடந்து; சீறிய பாலின் வேலை -
சிறந்த பாற்கடலின் கண்ணே;சிறுபிரை தெறித்தது அன்னான் -
மோர்த்துளி தெளித்தது போன்று; பூரியர்- அற்பர்கள் வாழ்கின்ற; இலங்கை
மூதூர் -
பழைய இலங்கைக்குள்;புக்கான் - புகுந்தான்.

     அறம் வெல்லும் -என்பதை மெய்ம்மை என்றும், உள்ளியதெல்லாம்
முற்றும் என்பதை விளைவும் அஃதே என்றும் உடன்பட்டு அனுமன்
கூறினான்.

     'என்று' என்னும்செய்து வாய்பாட்டெச்சத்தை 'என' என்னும் செய
என்னும் எச்சமாக மாற்றுக. அன்னான் என்னும் குறிப்பு வினைமுற்று ஒப்ப
என்னும் பெயரெச்சப் பொருளில் வந்தது.

    அனுமன்இலங்கையில் பல பகுதியில் தேடுதல், மோர் பாற்கடலில்
கலப்பதை ஒத்திருந்தது (புறம் 179)                            (96)