இலங்கையின்ஒளியை வியத்தல் 4931. | வான்தொடர் மணியின் செய்த மைஅறு மாடகோடி, ஆன்றபேர்இருளைச் சீத்துப் பகல்செய்தஅழகை நோக்கி, ஊன்றிய உதயத்துஉச்சி ஒற்றைவான்உருளைத் தேரோன், தோன்றினன்கொல்லோ ? என்னா அறிவனும்துணுக்கம் கொண்டான். |
மைஅறு மணியில்செய்த - குற்றம் அற்ற மணிகளால் அமைக்கப் பெற்ற; வான்தொடர் - ஆகாயம் அளாவிய; மாடகோடி - மாளிகையின் சிகரம்; ஆன்ற - எங்கும் நிரம்பியிருக்கின்ற; பேர் இருளை - மிக்க இருளை; சீத்து - போக்கி; பகல் செய்த - ஒளியைத் தோற்றுவித்த; அழகை நோக்கி - தன்மையைப் பார்த்து; அறிவனும் - அறிஞனாகிய அனுமனும்; வான் - வானத்தில் இயங்கும்; ஒற்றை உருளைத் தேரோன் - ஒரு சக்கரத்தால் இயங்கும் தேரையுடைய சூரியன்; ஊன்றிய - நிலைத்த; உதயத்து உச்சி - உதயகிரியின் சிகரத்திலே; தோன்றினன் கொல் - உதித்து விட்டானோ; என்று - என்று நினைத்து; துணுக்கம் கொண்டான் - திடுக்கிட்டான். மாடம் -உதயகிரி. மாடகோடி - சூரியன். பகல் - ஒளி - பகற்காலம். 'பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பழம்பாட்டு) மாடம் - மாளிகை. கோடி - உச்சி (சிகரம்) (97) |