மொய்ம்மணி மாட மூதூர், முழுது இருள் அகற்றா நின்ற, மெய்ம்மையைஉணர்ந்து, நாணா 'மிகை' எனவிலங்கிப் போனான்; இம்மதில்இலங்கை நாப்பண் எய்துமேல்,தன்முன் எய்தும் மின்மினி அல்லனோ, அவ் வெயிற்கதிர் வேந்தன்? அம்மா!
மொய் - நெருங்கிய; மணி - மணிகளால் அமைக்கப் பெற்ற; மாடமூதூர் - மாடங்கள் நிரம்பிய இலங்கை நகர்; முழுது இருள் - எல்லாஇருளையும்; அகற்றா நின்ற - நீக்குகின்ற; மெய்ம்மையை - பிரத்தியட்சமானஉண்மையை; உணர்ந்து - அறிந்து; வெயில் கதிர் வேந்தன் - வெயிலையும்கிரணத்தையும் உடைய சூரியன்; நாணா - வெட்கம் அடைந்து; மிகை என -(நாம் இங்கு) அதிகப்படி என்று கருதி; விலங்கிப் போனான் - ஒதுங்கிப்போய்விட்டான்; (அவன் நாணம் இல்லாமல்) மதில் - மதில்களால்சூழப்பெற்ற; இ - இந்த; இலங்கை நாப்பண் - இலங்கைக்கு நடுவிலே; எய்துமேல் - வருவானேயாயின் (அவன்); தன்முன் எய்தும் - தனக்கு முன்னே(அறிவின்றி) வந்த; மின்மினி அல்லனோ - மின்மினிப்பூச்சியாக மாட்டானோ; அம்மா - (இது) அதிசயம். (இது வியப்புடைச்சொல்) (98)