4933.

பொசிவுறு பசும்பொன் குன்றில்,
    பொன்மதில் நடுவண், பூத்து,
வசைஅற விளங்கும்சோதி,
     மணியினால்அமைந்த மாடத்து,
அசைவுஇல் இவ்இலங்கை மூதூர்,
     ஆர்இருள்இன்மை யாலோ,
நிசிசரர்ஆயிற்று அம்மா,
    நெடுநகர்நிருதர் எல்லாம்.

     பொசிவு உறு -ஒளிக் கசிவைப் பெற்றிருக்கின்ற; பசும்பொன்
குன்றில்-
பசிய பொன்மயமான திரிகூட மலையின்கண்; பொன் மதில்
நடுவண் -
பொன்னாற் செய்த மதிலுக்கு நடுவில்; பூத்து - மலர்ந்து; வசை
அற -
குற்றம்எல்லாம் இல்லாது போக; விளங்கும் - பிரகாசிக்கின்ற; சோதி
மணியினால் -
ஒளிக்கப்பெற்ற மாணிக்கங் களால்; அமைந்த மாடத்து -
அமைந்தமாடங்களால்; அசைவு இல் - நடுங்குதல் இல்லாத; இவ் இலங்கை
மூதூர் -
இலங்கை நகரில்; ஆர் இருள் இன்மையாலோ - மிக்க இருள்
இல்லாதகாரணத்தாலோ; நெடுநகர் - பெரு நகரில் (வாழ்கின்ற); நிருதர்
எல்லாம் -
எல்லா அரக்கர்களும்; நிசிசரர் ஆயிற்று - இரவில்
சஞ்சரிப்பவர்கள்ஆயினது.

    இது தற்குறிப்பேற்றம். பிற - பிறவே. பொசிவுறுதல் - கசிதல்.
நீர்ப்பொசிவு, கண்டுள்ளோம். இங்கு ஒளிப்பொசிவு பேசப்படுகிறது இதுவே
கவிச் சக்கரவர்த்தியின் திருவுள்ளம் பொசிவு - நெகிழ்வு என்பர். ஈண்டு
நெகிழ்ச்சி வேண்டின் கொள்க.

    98-99 ஆம்பாடல்கள் அனுமனின் கற்பனை ஓட்டம். 98 ஆம் பாடல்
சூரியனை மின்மினியாக்கிற்று. 99ஆம் பாடல் அரக்கரை நிசிசரர் ஆக்கிற்று.
இது கவிதைச் சித்து.

    நிருதர்நிசிசரர் ஆயினது இருள் இன்மையாலே என்க. ஆயிற்று என்பது
'ஆயது' என்றும் பொருள்தரும் தொழிற்பெயர் ஆம் - முற்று அன்று.
இன்மையாலோ - இதில் உள்ள ஓகாரம் அசையாகவும் கொள்ளலாம்
அசையாகக் கொண்டால் இருள் இன்மையால் நிருதர் நிசிசரர் ஆயினர் என்க.
                                                      (99)