அனுமன் மறைந்துசெல்லுதல்

4934.

என்றனன்இயம்பி, 'வீதி
     ஏகுதல்இழுக்கம்' என்னா,
தன்தகை யனையமேனி
     சுருக்கி,மாளிகையில் சார
சென்றனன் -என்ப மன்னோ -
     தேவருக் கமுதம் ஈந்த
குன்று எனஅயோத்தி வேந்தன்
    புகழ்என,குலவு தோளான்.

     தேவருக்கு -தேவர்களுக்கு; அமுதம் ஈந்த - அமுதத்தை வழங்கிய;
குன்று என - (மந்தர) மலையைப் போலவும்; அயோத்தி வேந்தன் -
அயோத்தி அரசனான இராமபிரானின்; புகழ் என - புகழைப் போலவும்;
குலவு தோளான் - திரண்ட தோள்களைப் பெற்ற அனுமன்; என்றனன்
இயம்பி -
என்று (இலங்கையின் அழகைத்) தனக்குள் கூறிக் கொண்டு; வீதி
ஏகுதல் -
வீதி வழியே போவது; இழுக்கம் என்னா - தவறு நேர்வதற்குக்
காரணம் என்று நினைத்து; தன் தகையனையமேனி - தன்னுடைய
சிறப்புக்கேற்ற திருமேனியை; சுருக்கி - சுருக்கிக் கொண்டு; மாளிகையில் சார- மாளிகை சார; சென்றனன் - போயினான்.

     'மாளிகையின்சாரல்' என்று பாடம் கொண்டு மாளிகையாகிய மலைச்
சாரலில் எனப் பொருள் உரைப்பர். சாரல் என்றதனால் மாளிகை
மலையாயிற்று. மாளிகையை ஒட்டிய பகுதியைச் சாரல் என்பர். என்ப -
உரையசை மன், ஓ, இடைச்சொற்கள், அசை நிலையாய்வந்தன. தெருவில்
சென்றால் அரக்கரால் வரும் இடையூற்றை 'இழுக்கம்' என்றான்.       (100)