4935. | ஆத்துறுசாலை தோறும், ஆனையின்கூடம் தோறும், மாத்துறு மாடம்தோறும், வாசியின் பந்தி தோறும், காத்துறு சோலைதோறும், கருங்கடல்கடந்த தாளான் பூத்தொறும்வாவிச் செல்லும் பொறிவரிவண்டின் போனான். |
கருங்கடல் கடந்ததாளான் - பெரிய கடலைக் கடந்ததிருவடியுடைய அனுமன்; ஆத்துறு சாலை தோறும் - பசுக்கள் நெருங்கியுள்ள கொட்டில்கள் தோறும்; ஆனையின் கூடம் தோறும் - யானைக் கொட்டாரங்கள் தோறும்; மாத்துறு மாடந் தோறும் - பலவகை விலங்குகள் உள்ள மாடங்கள்தோறும்; வாசியின் பந்தி தோறும் - குதிரைச் சாலைகள் தோறும்; கா - பாதுகாப்பு; துறும் - நெருங்கியுள்ள; சோலை தோறும் - சோலைகள் தோறும்; பூத்தொறும் வாவிச் செல்லும் - மலர்கள் தோறும் தாவிப் போகின்ற; பொறிவரி வண்டின் - புள்ளிகளும் வரிகளுமுடைய வண்டினைப் போல்; போனான் - சென்றான். கடல்கடந்ததிருவடியுடைய அனுமன், பூக்கள் தோறும் தாவிப் போகும் வண்டைப் போல் - சாலைகள் தோறும், கூடந்தோறும். மாடந் தோறும், பந்தி தோறும் சென்றான். ஆ - பசு. ஆன் - எருது என்றும் பொருள் கூறலாம். ஆன் அலாது ஊர்தியில்லை என்று திருமுறை பேசும். (நாவரசர் தானலாது) ஆன்+ஐ- ஐ சாரியை. ஊர் உற்றது என்று கூற வேண்டியதைக் கவிச் சக்கரவர்த்தி 'ஊரை உற்றது' என்பான் - (நகர் நீங்கு படலம் 230). மாத்து - உயர்வு என்று கூறுவாரும் உளர். அனுமன் பிறர் அறியாவண்ணம் சென்றான். அதை விளக்கவே பூத்தொறும் தாவிச் செல்லும் வண்டு வந்தது. அவனுக்குக் கூடமும் மாடமும் பூவாக இருந்தன. 'காத்து உறு சோலை' என்று பிரித்து, பாதுகாத்துப் பயன் படுத்தும் சோலைகள் எனப் பொருள் உரைத்தல் பொருந்துமேல் கொள்க. (101) |