4936.

பெரியநாள்ஒளிகொள் நானா
     வித மணிப்பித்திப்பத்தி,
சொரியும் மா நிழல் அங்கங்கே
     சுற்றலால்,காலின் தோன்றல்,
கரியன்ஆய்,வெளியன் ஆகிச்
     செய்யனாய்காட்டும் - காண்டற்கு
அரியன்ஆய்எளியன் ஆய்த் தன்
     அகத்து உறைஅழகனேபோல்.

     நாள் ஒளி கொள்- நட்சத்திரங்களின் ஒளியைப் பெற்ற; நானாவித -
பலவிதமான; பெரியமணி - பெரியமணிகள் (பதிக்கப்பெற்ற); பித்திப் பத்தி -
சுவரின் வரிசைகள்; சொரியும் - பொழிகின்ற; மா நிழல் - சிறந்தஒளியானது
அங்கங்கே; அனுமன் செல்லுகின்ற இடமெல்லாம் சுற்றலால் - அனுமனைச்
சூழ்ந்துள்ள
காரணத்தால்; காலின் தோன்றல் - வாயுதேவனின் புதல்வனான
அனுமன்; காண்டற்கு அரியனாய் - கண்ணாற் காண்பதற்கு அரியவனாய்;
எளியனாய் - அறிவால் காண்பதற்கு எளியவனாய்; தன் அகத்து -
தன்னுடைய மனத்திலே; உறை அழகனே போல் - தங்கியிருக்கும்
இராமபிரானைப் போல; கரியனாய் - கரிய நிற முடையவனாகவும் (திருமால்);
வெளியனாய் - வெண்ணிறமுடையவனாகவும் (பிரம்மதேவன்); செய்யனாய் -
செந்நிறமுடையவனாகவும் (சிவபிரான்); காட்டும் - (தன்னைப் பலவிதமாகக்)
காண்பித்துக் கொண்டான்.

     பலவிதமாகஒளியைப் பாய்ச்சும் சுவர்களின் சார்பால் அனுமன் தன்
உள்ளத்தில் உள்ள இராமபிரானைப் போலக் கரியவனாகவும் வெளியவனாகவும்
சிவந்தவனாகவும் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டான், அனுமன் நீலம்,
முத்து, மாணிக்க மணிகளின் ஒளியால் சுற்றப்படும் போது முறையே கரியன்,
வெளியன், செய்யன் ஆகிறான் என்க.                        (102)