அனுமன்அரக்கர்களைக் காணுதல்

4937.

ஈட்டுவார்,தவம்அலால் மற்று
     ஈட்டினால்,இயைவது இன்மை
காட்டினார்விதியார்; அஃது
    காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டுவார் முலைபொறாத
     பொய் இடைநையப் பூநீர்
ஆட்டுவார் அமரர்மாதர்;
     ஆடுவார்அரக்க மாதர்.+

     வார் பூட்டு -கச்சால் இறுக்கிக் கட்டப்பெற்ற; முலை பொறாத -
கொங்கைகளைச் சுமக்கவியலாத; பொய் இடை - நுட்பமான இடையானது;
நைய - வருத்தம் அடையும்படி; அமரர் மாதர் - ;தேவ மகளிர்; பூ நீர் -
சங்கமுகநதியில்; ஆட்டுவார் - நீராட்டுவார்கள்; அரக்க மாதர் - அரக்க
மகளிர்; ஆடுவார் - நீராடுவார்கள்; அஃது - அக்காட்சியால்; விதியார் -
நல்வினை என்பவர்; ஈட்டுவார் - தேடிச் சேர்க்க விரும்புவர்; தவம்
அ(ல்)லால் -
தவம் ஒன்றைத் தவிர; மற்று - (பொருள் முதலான) பிறவற்றை;
ஈட்டினால் - சேர்த்து வைத்தால்; இயைவது இன்மை - ஏற்றதாக (அறம்)
அமையாததை; காட்டினார் - கண்கூடாக்கினார். (இதை);
 காண்கிற்பார் -
காணும்ஆற்றலுடையவர்கள்; காண்மின் - காணுங்கள் (அம்மா - உரையசை).

     இடை வருந்தத்தேவமகளிர் நீராட்ட அரக்கியர்கள் நீராடு கின்றனர்
அக்காட்சியால் தேடிச் சேர்க்க விரும்புபவர் தவத்தைத் தவிரப் பிறவற்றைச்
சேர்த்தால் அவை இயையாமையை விதியார் அறிவித்தார். காணும்
ஆற்றலுடையவர்கள் காணுங்கள்.

     100 முதல் 103வரை கவிக் கூற்று. இழிந்த அரக்கியர்க்கு உயர்ந்த தேவ
மாதர் பணி செய்தனர். இது தவத்தின் பயன். 'அறத்தாறு' என்னும் குறளில்
'இது' என்பது ஈண்டு அது என வந்தது.

     இஃது என்னும் பாடபேதம் சிறந்தது. பூ நீர் - சங்கமுக நதி; பூ - சங்க
முகம். நீர் - நதி. பூம்புகார் என்பதன் தொடரை ஆய்க. பூ நீர் - பன்னீர்
என்று பொருள் கூறப் பெற்றது. அம்மா வியப்பிடைச்சொல்.          (103)