4939. | 'இலக்கணமரபிற்கு ஏற்ற எழுவகைநரம்பின் நல்யாழ் அலத்தகத்தளி்ர்க்கை நோவ, அளந்துஎடுத்து அமைத்த பாடல் கலக்குறமுழங்கிற்று' என்று கன்னியர்சேடி மார்கள் மலர்க்கையால்,மாடத்து உம்பர் மழையின்வாய்பொத்து வாரை- |
இலக்கண மரபிற்குஏற்ற - நூல் முறைக்குப் பொருந்திய; எழுவகை நரம்பின் - ஏழுவகையான நரம்பைப் பெற்ற; நல்யாழ் - சிறந்த யாழில்; அலத்தகம் - செம்பஞ்சு பூசப்பெற்ற; தளிர்க்கை நோவ - தளிர்போன்ற கைகள் வருந்த; கன்னியர் - அரக்கப் பெண்கள்; அளந்து - தாளத்திற்கேற்ப அளக்கப்பட்டு; எடுத்து அமைத்த பாடல் - எடுப்பாக அமைத்த பாசுரம்; கலக்குற - கலக்கம் அமையும்படி; முழங்கிற்று என்று - இடிக்கின்றதென்று; மழையின்வாய் - மேகத்தின் வாயை; மலர்க்கையால் - (தம்முடைய) மலர்போன்ற கைகளால்; பொத்துவார் - மூடுகின்ற; சேடிமாரை - (அரக்கியரின்) தோழியர்களையும். யாழில் உருக்கள்சுரங்களுடன் பாடப்பெறும் சுரங்களுடன் பாடும்பா பாசுரம் என்க. அளந்து எடுத்து அமைந்த பாடல் - இசைநூல் வல்லார் ஆராய வேண்டிய பகுதி. இயற்றமிழ் ஒன்றே அறிந்தவர் உண்மை காண ஒண்ணாதது அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. 'அலத்தகப் பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவம்' (கம்ப. 2385) என்னும் தொடரை நோக்குங்கால் அலத்தகம் குழம்பை உணர்த்திடுமோ என்று தோன்றுகிறது. இது அரத்தகம் என்றும் வழங்கப்படும். பொத்துவார் - முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது. (105) |