4944. | புலிஅடு மதுகை மைந்தர் புதுப்பிழை உயிரைப் புக்கு, நலிவிட அமுதவாயால் நச்சுஉயிர்த்து, அயிற்கண் நல்லார், மெலிவுடைமருங்குல் மின்னின் அலமர,சிலம்பு விம்மி ஒலிபட உதைக்கும்தோறும் மயிர்ப்புளகு உறுகின் றாரை- |
புலிஅடும் -புலியைக்கொல்லும்; மதுகை மைந்தர் - வலிமையுடைய வீரக்கணவர் புரிந்த; புதுப்பிழை - புதிய குற்றமானது; புக்கு - உள்ளத்தே நுழைந்து; உயிரை நலிவிட - உயிரையே துன்பம் செய்ய; அயில் கண் நல்லார் - வேல்போன்ற கண்களையுடைய மகளிர்; அமுத வாயால் - (முன்பு) அமுதம் வழங்கிய வாயால்; நச்சு உயிர்த்து - (நச்சு) பாம்பைப் போல மூச்சை வெளிப்படுத்தி; மெலிவு உடை மருங்கில் - மெலிந்துள்ள இடையானது; மின்னின் அலமர - மின்னலைப் போலத் தடுமாறவும்; சிலம்பு - சிலம்பானது; விம்மிஒலிபட - துடித்து ஒலிக்கவும்; உதைக்கும் தோறும் - உதைக்கும் போதெல்லாம்; மயிர்ப்புளகு உறுகின்றாரை - மயிர் சிலிர்க்கப் பெறுகின்றவர் களையும்; தலைவி உதைப்பதுதலைவனுக்கு இன்பம் தரும். உய்ந்த பிள்ளை ஊடலைக் காட்டும் குறிப்பாக உதைத்தலை அபிநயித்தார். அப்போது எம்பார், 'அவனுக்கு அது தேட்டம், என்றார். வைணவ உரைவளம் (30பக்) காண்க. (110) |