4946. | ஆலையில்,மலரில், சாரல் முழையினில், அமுதவாரிச் சோலையில்,துவசர் இல்லில் சோனகர்மனையில், தூய வேலையில் கொளஒணாத வேற்கணார்குமுதச் செவ்வாய் வால் எயிற்று ஊறுதீம்தேன் மாந்தினர்மயங்கு வாரை- |
ஆலையில் மலரில்- கரும்பிலும் மலரிலும்; சாரல் முழையினில் - மலைச்சாரலையடுத்த குகையிலும்; அமுதவாரிச் சோலையில் - நீர்ப் பெருக்குடைய சோலையிலும்; துவசர் இல்லில் - துவசர்களின் வீட்டிலும்; சோனகர் மனையில் - யனவர் மனையிலும்; தூய வேலையில் - தூய பாற்கடலிலும்; கொள ஒணாத - பெற முடியாத; வேல் கண்ணார் - வேல் போன்ற கண்ணைப் பெற்ற மகளிரின்; குமுதச் செவ்வாய் - குமுத மலர் போன்ற வாயில்; ஊறும் வால் எயிற்று - வெள்ளிய பற்களுக்கிடையில் ஊறுகின்ற; தீம் தேன் - இனிய தேனை; மாந்தினர் - நன்றாகக் குடித்து; மயங்குவோரை - மயங்குபவர்களாய அரக்கரையும். துவசர் -கள்விற்பவர். (112) |