4948. | ஏதிஅம்கொழுநர் தம்பால் எய்தியகாத லாலே, தாது இயங்குஅமளிச் சேக்கை, உயிர்இலாஉடலின் சாய்வார், மாதுயர்க் காதல்தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார், தூதியர் முறுவல்நோக்கி உயிர்வந்துதுடிக்கின்றாரை- |
ஏதி அம்கொழுநர் தம்பால் - ஆயுதம் ஏந்தியகணவர்பால்; எய்தியகாதலால் - ஒன்றுபட்ட காமத்தாலே; (அவர்பிரிய) தாது இயங்கு - மகரந்தப்பொடிகள், அசைகின்ற; அமளிச்சேக்கை - படுக்கையிடத்தில்; உயிர் இலா -உயிர் அற்ற; உடலின் சாய்வார் - உடம்பைப் போல் விழுந்து; மாதுயர் -மிக்க துன்பத்தை உண்டு பண்ணும்; காதல் தூண்ட - காதலானதுஉந்துதலாலே; வழியின் மேல் வைத்த - (அவர் வரும்) வழியிலே நிறுத்திவைத்த; கண்ணார் - கண்களையுடையவராய்;தூதியர் முறுவல் நோக்கி - தூதாகச் சென்ற பெண்களின் புன்னகையைப் பார்த்து; உயிர் வந்து - சென்ற உயிர் மீளவும் வரப் பெற்று; துடிக்கின்றாரை - துடிக்கின்றவர்களையும்; ஏதி - ஆயுதம்,அமளி - படுக்கை; சேக்கை - இடம். (114) |