4950.

இழைதொடர் வில்லும் வாளும்
     இருளொடு மலைய, யாணர்க்
குழைதொடர்நயனம் கூர்வேல்
     குமரர்நெஞ்சு உருவக் கோட்டி,

முழைதொடர் சங்கு பேரி
     முகில்என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன
     விழாவொடு வருகின்றாரை-

     இழை தொடர் -ஆபரணங்களிலிருந்து புறப்படும்; வில்லும் -
(விட்டுவிட்டு வரும்) ஒளியும்; வாளும் - இடையீடின்றி வரும் ஒளியும்;
இருளொடு மலைய - இருளுடன் போர் செய்யுவும்; குழை தொடர் -
காதணிகளை அளாவும்; நயனம் - கண்களாகிய; யாணர் - புதுமையான;
கூர்வேல் - கூர்மையான வேலை; கோட்டி - செலுத்தி (அதனால்); குமரர்
நெஞ்சு -
இளைஞர்களின் நெஞ்சங்களை; உருவ - துளைக்கவும்; தொடர் -
அடுக்கடுக்கான; முழைசங்கு - துளை பெற்ற சங்குகளும்; பேரி -
முரசங்களும்; முகில் என - மேகம் போல; முழங்க - ஆரவாரிக்கவும்; மூரி
மழை தொடர் -
வலிய மேகத்தின் பால் அன்பு கொண்ட; மஞ்ஞை என்ன
-
மயில்களைப் போல; விழாவொடு வருகின்றாரை - விழாக் கோலத்துடன்
வரும் பெண்டிரையும்;

     மலைய, உருவ,முழங்க, வருகின்றாரை எனக்கூட்டுக - அன்றி -
மலைய, முழங்க, வேல் உருவக் கோட்டி வருகின்றாரை என்றும் பொருள்
கொள்ளலாம். வில் - விட்டுவிட்டுப் பிரகாசிப்பது வாள் - தொடர்ந்து
பிரகாசிப்பது. வில்லும் வாளும் இருளொடு போர் செய்கிறது (சிலேடை)
பெண்மையைச் சிறப்பிக்கும் சங்க நூல்கள் 'விழவு மேம்பட்ட நலன்' (குறுந்
125) குறுமகள் வந்தென விழவாயிற்று (குறுந் 294) என்று பேசும்.
      (116)