அனுமன்கும்பகருணனைக் காணுதல்

4955.

இயக்கியர், அரக்கி மார்கள்,
     நாகியர்,எஞ்சுஇல் விஞ்சை
முயல்கறைஇல்லாத் திங்கள்
    முகத்தியர், முதலி னோரை-
மயக்குஅற நாடிஏகும்
     மாருதி, மலையின் வைகும்
கயக்கம்இல்துயிற்சிக் கும்ப
     கருணனைக் கண்ணின் கண்டான்.

     இயக்கியர் -யட்சப்பெண்கள்; அரக்கிமார்கள் - அரக்கப்
பெண்கள்;நாகியர் - நாகலோகப் பெண்கள்; எஞ்சு இல் -
 குறைவற்ற;
முயல்கறை- முயலாகிய களங்கம்; இல்லாத் திங்கள் - இல்லாத
சந்திரனைப் போன்ற; முகத்தியர் - முகத்தையுடைய; விஞ்சை -
வித்தியாதரப்பெண்கள்; முதலினோரை - முதலான பெண்களை; மயக்கு
அற -
சந்தேகம்இல்லாதபடி; நாடி ஏகும் மாருதி - ஆராய்ந்து செல்லும்
ஆஞ்சநேயன்;மலையின் வைகும் - மலைபோல் உள்ளவனும்; கயக்கம் இல்
துயிற்சி -
இடையீடில்லாத உறக்கத்தை உடையவனும் ஆகிய;
கும்பகருணனை -கும்பகர்ணனை; கண்ணின் கண்டான் - கண்களால்
பார்த்தான்.

     இயக்கியர்முதலானோரை நாடிச்செல்லும் மாருதி கும்பகர்ணனைப்
பார்த்தான்.

     முகத்தியர்,என்னும் குறிப்பு வினைமுற்று பெயரெச்சப்பொருளில் வந்தது.
வினை எஞ்சு கிளவியும் வேறு பல்குறிய (தொல்-சொல் 457-சேனா) விஞ்சை
என்பது ஆகுபெயராய் விஞ்சையரைக் குறித்தது. 'வித்தைகள் வித்தை ஈசர்'
என்னும் சித்தியாரில் வித்தை என்பது மந்திரேசுரரைக் குறித்தமை காண்க
(சித்தி. சுபக்கம் 1-25) கயக்கம் - இடையீடு. 104 முதல் 121 வரை ஒரு தொடர்.
                                                          (121)