4957. | அன்னதன்நடுவண், ஓர் அமளி மீமிசை பன்னக அரசுஎனப்பரவை தான்என, துன்இருள்ஓருவழித் தொக்க தாம்என, உன்னஅருந்தீவினை உருக்கொண் டென்னவே. |
அன்னதன் நடுவண்- அந்தமண்டபத்தின் நடுவில், ஓர் அமளி மீமிசை - ஒரு கட்டிலின் மேலே; பன்னக அரசு என - பாம்பரசனான ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - பாம்பரசனான ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - கடலைப் போலவும்; ஒரு வழி - ஒரு பக்கத்தில்; தொக்கது - ஒன்று கூடிய; துன் இருள் என - மிக்க இருள் போலவும்; உருக் கொள் - வடிவம் பெற்ற; உன்ன அரும் - சிந்திக்க அறியாத; தீவினை என்னவும் - பாபத்தைப் போலவும் (உள்ள கும்பகருணன்). தொக்கது இருள் -ஒன்று கூடிய இருள் தொக்கது என்னும் முற்று பெயரச்சப் பொருளில் வந்தது. (முகவை கவிராயர். நன் 351) இங்ஙனம் மாற்றாக்கால் அரசு என, பரவை என - யாவும் பெயராக வருதலும் தொக்கது என முற்று வினையாக வருதலும் சிறப்பின்மை ஓர்க. ஆம் - அசை 'உடற்றவே கொல் ஆம் இப்படை எடுத்தது' என்ற இடத்து ஆம் அசையாயிற்று (கம்ப. 2308.) (123) |