4960. | மூசியஉயிர்ப்பு எனும் முடுகு வாதமும், வாசலின்புறத்திடை நிறுவி, வன்மையால் நாசியின்அளவையின் நடத்த, கண்டவன் கூசினன்;குதித்தனன், விதிர்த்த கையினான். |
மூசிய - ஒன்றன் பின்ஒன்றாய் மொய்த்து வருகின்ற; உயிர்ப்பு எனும் - மூச்சுக்காற்று எனப்படும்; முடுகு வாதமும் - வேகமான காற்றும்; வாசலின் புறத்திடை நிறுவி - (அனுமனைக் கும்பகர்ணன் கிடந்தஅரண்மனை) வாயிலின் புறத்தை விட்டு அப்பாற் செல்ல வொட்டாது நிறுத்தி; வன்மையால் - தன் ஈர்ப்பு வலிமையினாலே; நாசியின் அளவையின் நடத்த - கும்பகர்ணனது மூக்கு வரை இழுப்பது ஆக இயக்க; கண்டவன் - அதனை அநுபவத்தால் உணர்ந்த அனுமன்; கூசினன் - மூக்கின் உள்ளே செல்லக்கூசி; விதிர்த்த கையினான் குதித்தனன் - அச்சத்தால் கைகளை உதறிக் குதித்து அப்பாற் சென்றான். புறத்தேஅனைத்தையும் கண்டுவரும் அனுமனைக் கும்பகர்ணனது சுவாசக் காற்று தன் வாசலை விட்டுப் புறஞ் செல்லாது நிறுத்தி மூக்குவரை இழுக்க உள்ளே போகாது தன் ஆற்றலால் தப்பிக் கை உதறிக் குதித்தான் எனவே அத்தகு சுவாச காதம் உடையனாய் உள்ளான் கும்பகருணன் என்பதாம். 'வீரன் வாயில் திறத்தலும் சுவாத காதம் மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக' (கம்ப.7320) எனப் பின்வருவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. (126) |