அனுமன் கும்பகர்ணனைஇராவணனோ என ஐயுற்றுத் தெளிதல் கலிநிலைத்துறை 4964. | ஆவ தாகியதன்மைய அரக்கனை, அரக்கர் கோ எனாநின்றகுணமிலி இவன்எனக் கொண்டான் காவல்நாட்டங்கள் பொறியுகக் கனலெனக் கனன்றான் ஏவனோஇவன் ?மூவரின் ஒருவனாம் ஈட்டான் ! |
மூவரின் -மும்மூர்த்திகளில்; ஒருவன் ஆம் எனும் - ஒப்பற்ற சிவபிரான் ஒப்பாவான் என்று கூறப்படும்; ஈட்டான் - வலிமையுடைய அனுமன்; ஆவது ஆகிய தன்மைய - அப்படிப்பட்ட தன்மையுடைய; அரக்கனை - அரக்கனாய கும்பகருணனை; இவன் ஏவனோ - இவன் யாரோ (என ஐயுற்று); அரக்கர் கோ எனா - அரக்கர்களின் தலைவன் என்று; நின்ற - நிலைபெற்றுள்ள; குணம் இலி - பண்பற்றவன்; இவன் எனா - இவன் என்று; கொண்டான் - மனத்திலே எண்ணிக் கொண்டு; காவல் நாட்டங்கள் - உலகைப் பாதுகாக்கும் கண்கள்; பொறி உக - நெருப்புப் பொறி பறக்க; கனல் என - தீயைப் போன்று; கனன்றான் - சினங் கொண்டான். பிறர்,'அரக்கனை இராவணன் என்று கருதியதாகவும், பிறகு மூவரில் (இராவணன், கும்பன், மேகநாதன்) யாவர் என்று எண்ணியதாகவும் கூறுவர். வை.மு.கோ. இவன் திரிமூர்த்திகளுள் யாராயினும் ஒருவன் என்று சொல்லத்தக்க பெருமை உடையவனான அனுமன் என்று இறுதியடிக்கு உரை வகுத்தார். (130) |