4967. | மாட கூடங்கள், மாளிகை ஓளிகை, மகளிர் ஆடு அரங்குகள்,அம்பலம், தேவர் ஆலயங்கள், பாடல் வேதிகை,பட்டி மண்டபம் முதல் பலவும் நாடி ஏகினன்இராகவன் புகழ்எனும் நலத்தான். |
இராகவன் புகழ்எனும் நலத்தான் - இராமபிரானின்கீர்த்தியின் வடிவமான அனுமன்; மாட கூடங்கள் - மாடகூடங்களையும்; மாளிகை ஒளிகை - மாளிகை வரிசைகளையும்; மகளிர் ஆடு அரங்குகள் - பெண்கள் விளையாடும் மேடைகளையும்; அம்பலம் - சபைகளையும்; தேவர் ஆலயங்கள் - கடவுளர் கோவில்களையும்; பாடல் வேதிகை - இசையரங்குகளையும்; பட்டி மண்டபம் - விவாத மேடைகளையும்; முதல் - இவை முதலான; பலவும் - பலவற்றையும்; நாடி - (பிராட்டியைத்) தேடி; ஏகினன் - சென்றான். இராமபிரானின்புகழின் வடிவமான அனுமன், மாடகூடங்கள் முதலானவற்றைத் தேடிச் சென்றான். இராமபிரானின்புகழையே எப்போதும் அனுமன் சிந்தித்தபடி இருத்தலின் அவனை இராமபிரானின் புகழாகவே கவிஞன் இசைத்தான். ஒளிகை - வரிசை. அம்பலம் - பலர்கூடு்ம் இடம். வேதிகை -மேடை. (133) |