4971. | உற்றுநின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான் 'குற்றம்இல்லதோர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான் செற்றம்நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான் பொற்றைமாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான். |
உற்றுநின்று -(வீடணனை)அணுகியிருந்து; அவன் உணர்வை - அந்த வீடணனின் உணர்ச்சியை; தன் உணர்வினால் - தன்னுடைய ஆய்வுணர்வால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டு; இவன் - இங்கே உறங்கும் இவன்; குற்றம் இல்லது - குற்றங்கள் இல்லாத; ஓர் குணத்தினன் - ஒப்பற்ற குணமுடையவன்; எனக் கொண்டான் - என்று தெரிந்து கொண்டு (அதனால்); செற்றம் நீங்கிய - பகைமை விலகிய; மனத்தினன் - உள்ளத்தைஉடைய அனுமன்; ஒருசிறைசென்றான் - வேறொரு வழியி்லே போய்; பொற்றை மாடங்கள் கோடி - மலைகள் போன்ற மாடங்கள் கோடியளவானவை; ஓர் நொடி இடை - ஒருமுறை கைநொடிக்கும் நேரத்துள்; புக்கான் - புகுந்து பார்த்தான். ஒருத்தி தன்உணர்ச்சியைப் பிறவற்றில் செலுத்திப் பார்ப்பதை வடநூலார்'ஸம்யக் ஞானம்' என்பர். (விவேகானந்தர் ராஜயோகம் யோக சூத்திரம் விபூதிபாதம்). செற்றம் - நீங்காச் சினம் - 'இகலொடு செற்றம் நீங்கிய மனத்தினர்'என்பர் நக்கீரர். பொற்றை - மலை. பொற்றைமாமுழைப் புலாலுடைவாய்(ஆரண்ய. கரன் 135) நொடி கை நொடிக்கும் நேரம். ஒரு மாத்திரை அளவு.குற்றெழுத்து உச்சரிக்கும் காலம். (137) |