அனுமன்இந்திரசித்தனைக் காணுதல் 4972. | முந்துஅரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச் சிந்துரம் பயில்வாச்சியர், பலரையும் தெரிந்து, மந்திரம்பலகடந்து, தன்மனத்தின்முன் செல்வான் இந்திரன் சிறைஇருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். |
முந்து - முதன்மையான(சிறந்த); அரம்பையர் முதலினர் - அரம்பையர் முதலான; முழுமதி முகத்து - பூரண சந்திரனைப் போன்ற முகத்தையும்; சிந்துரம் பயில் வாய்ச்சியர் - செந்நிறம் மிக்க வாயையும் உடைய; பலரையும் - பலபெண்களையும்; தெரிந்து - (இவர்கள் பிராட்டியோ என்று) ஆராய்ந்து; பலமந்திரம் கடந்து - பல அரண்மனைகளைத் தாண்டி; தன் - தன்னுடைய; மனத்தின்முன் - மனத்தைவிட முன்னோக்கி; செல்வான் - வேகமாகச் செல்லும் அனுமன்; இந்திரன் சிறை இருந்த - இந்திரன் சிறைக் கைதியாயிருந்த; வாயிலின் கடை - சிறைச்சாலையின் முன்புறத்தை; எதிர்ந்தான் - எதிரே கண்டான். (அனுமன்)அரம்பையர் முதலான மகளிரைத் தேடிச் செல்லும் அனுமன் இந்திரன் கைதியாயிருந்த சிறைக் கோட்டத்தின் முற்றத்தை அடைந்தான். முழுமதி முகத்துச் சிந்துரம்பயில் வாய்ச்சியர் என்னும் நீள்தொடர் மகளிர் என்னும் சுருங்கிய பொருள் தந்து நிற்கின்றது. இனியர், தம் உரையில் இத்தகைய தொடரைச் சுட்டுப் பொருள் தந்ததென்றார். மந்திரம், வீடன்று. அரண்மனை. 'மாளிகை, சாலை மந்திரம் பவளம் - கோயில் என்ப குலமும் அதற்கே (பிங்கலம். ஆலய வகை 652) சிறையிருப்பார் எப்போதும் வாயிலையே நோக்கியிருத்தலின் சிறையிருந்தவாயிலின்கடை என்று பேசப்பட்டது. அனுமன் மனத்தைவிட வேகமாகச் சென்றான். வாயுவேகம், மனோவேகம் என்பர். (138) |