4974. | முக்கண்நோக்கினன் முதல்மகன் அறுவகை முகமும் திக்கு நோக்கியபுயங்களும், சில கரந்தனையான், ஒக்கநோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப் புக்குநோக்கினன் புகைபுகா வாயிலும் புகுவான். |
புகைபுகா வாயிலும்புகுவான் -புகை நுழையாத இடத்திலும் புகும் அனுமன்; முக்கண் நோக்கினன் - மூன்று கண்ணாற் பார்க்கின்ற இறைவனின்; முதல்மகன் - சிறப்புற்ற மகனான முருகப்பிரான்; அறுவகை முகமும் - ஆறுவகையான முகங்களிலும்; திக்கு நோக்கிய புயங்களும் (கரங்களும்) - திசைகளை நோக்கிய பன்னிரு கரங்களிலும்; சில- சில முகங்களையும் சில கரங்களையும்; கரந்தனையான் - ஒளித்துக் கொண்டாற் போன்று தோன்றுபவனும்; ஒக்க நோக்கியர் - ஒரேபடித்தான அழகுடைய மகளிர்களின்; குழாத்திடை - கூட்டத்தின் நடுவில்; உறங்கு கின்றானை - உறங்குபவனும் ஆகிய இந்திரஜித்தனை; புக்கு - அவன் அரண்மனைக்குள் புகுந்து; நோக்கினன் - பார்த்தான். ஒக்கநோக்கியர் - அவயவம் முழுதும் அழகிய பெண்கள் என்பது பழையவுரை (அடை -பதி) (140) |