4975. | வளையும்வாள்எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ? அளையில்வாள்அரி அனையவன்-யாவனோ ? அறியேன்; இளைய வீரனும்ஏந்தலும், இருவரும், பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும் உளது என உணர்ந்தான். |
அளையில் வாள்அரி அனையவன் - குகையில் உறங்கும் கொடுஞ்சிங்கம் போன்ற இவ்வீரன்; வளையும் வாள் எயிறு - வளைந்த ஒளியுள்ள பற்களையுடைய ; அரக்கனோ? - அரக்கர் குலத்தவனோ (அன்றேல்); கணிச்சியான் - மழுப்படை ஏந்திய சிவபிரானின்; மகனோ? - புதல்வனாகிய முருகப் பெருமானோ? யாவனோ - எவனோ (யாரென); அறியேன் - அறியாமல் உள்ளேன் (ஆனால்); இளைய வீரனும் - இளமைப் பருவமுடைய இலக்குவனும்; ஏந்தலும் - சரண் புக்காரைக் காக்கும் இராமபிரானும் (ஆகிய); இருவரும் - இரண்டு மகா வீரர்களும்; உளைய - மன உளைச்சல் அடையும்படி; உள்ள போர் - இனி நிகழக்கூடிய யுத்தம்; பல நாள் - பல நாள்கள்; இவனொடும் - இந்த வீரனுடன்; உளது - நிகழப் போகிறது; என - என்ற உண்மையை; உணர்ந்தான் - அறிந்தான். கணிச்சி - மழு.கணிச்சி மணிமிடற்றோன் (புறம் 56) அளை - குகை. இவனை யார் என அறியேன். ஆனால் இவன் போர் வல்லான் என்பதை அறிகிறேன், என்ற அனுமனின் தீர்க்கதரிசனம் கூர்மையானது. ஏந்தல் - சரணாகதி அடைந்தவரை ஏந்துபவன். காரணப்பெயர். (141) |