4981.

பாழி நல்நெடுங் கிடங்கெனப் பகர்வரேல் பல்பேர்
ஊழி காலம்நின்றுஉலகுஎலாம் கல்லினும் உலவாது
ஆழிவெஞ்சினத்துஅரக்கனை அஞ்சி, ஆழ்கடல்கள்
ஏழும், இந்நகர்சுலாயகொலாம் என இசைத்தான்

(அனுமன்) (இந்நீர்ப்பரப்பை)

     பாழி - பெரும்பரப்புடைய;  நல் - சிறந்த; நெடுங் கிடங்கு என -
நீண்ட அகழி என்று; பகர்வரேல் - யாவராவது கூறுவாரேயானால்;
(பொருந்தாது ஏன்எனில்) பலபேர் - பலமனிதர்கள்; ஊழிகாலம் நின்று -
உகமுடிவுக்காலம் வரை உறுதியாயிருந்து; உலகுஎலாம் -
எல்லாவுலகங்களையும்; கல்லினும் - தோண்டினும்; உலவாது -
அமைக்கவியலாது; (ஆதலால்) இஃது ஆழி - ஆழமான; வெஞ்சினத்து -
கொடுஞ்சினத்தையுடைய; அரக்கனை அஞ்சி -  அரக்கனுக்குப் பயந்து;
ஆழ்கடல்கள் ஏழும் - ஏழுபெருங்கடல்களும்; இந்நகர் - இந்த
இலங்கையைச்; சுலாய கொல் - சுற்றியுள்ளனவோ; என - என்று;
இசைத்தான் - கூறினான்.

     மனிதரால்படைக்கப்படுவது அகழி. இஃது அன்னது அன்று, என்பது
கருத்து. கொல் - ஐயம் ஆம் - அசை.                        (147)