4982.

ஆயது ஆகியஅகன்புனல் அகழியை அடைந்தான்
'தாய வேலையின்இருமடி விசைகொடு தாவிப்
போய காலத்தும்போக்குஅரிது' என்பது புகன்றான்-
நாயகன் புகழ்நடந்த பேர்உலகெலாம் நடந்தான்.

     நாயகன் -இறைவனானஇராமபிரானின்; புகழ் நடந்த - புகழ் பரவிய;
பேர் - பெரிய; உலகெலாம் - எல்லா உலகங்களிலும்; நடந்தான் - பரவிய
அனுமன்; ஆயது ஆகிய - மேலே கூறப்பெற்ற தன்மையுடையதாகிய; அகன்
புனல் அகழியை அடைந்தான் -
அகன்ற நீரை உடைய அகழியைச் சார்ந்து;
தாய வேலையின் - முன்பு கடந்த கடலைப் போல; இருமடி - இரண்டு
மடங்கு; விசைகொடு - வேகத்தை மேற்கொண்டு; தாவி - கடந்து; போய
காலத்தும் -
போன போதிலும்; போக்கு அரிது - (இவ் அகழியைக்)
கடப்பது கடினம்; என்பது - என்னும் மனக் கருத்தை; புகன்றான் -
வெளிப்படையாகப் பேசினான்.

     கடலைத் தாண்டியதுபோல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும்
கடக்க முடியாது என அனுமன் பேசினான். இராகவன் புகழ் பேசப்படும்
இடங்களில் எல்லாம் பேசப்படும் புகழாளன் அனுமன். நடத்தல் - பரவுதல்.
மறவர் குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று (புறவெ - மாலை - வெட்சி
- 8 கொ)                                                (148)