இடைநகர் அகழியின்ஏற்றம்

கலிவிருத்தம்

4983.

மேக்குநால்வகை மேகமும் கீழ்விழத்
தூக்கினால் அன்னதோயத்தது ஆய் துயர்
ஆக்கினான்படைஅன்ன அகழியை
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ ?

     மேக்கு - மேலே உள்ள; நால்வகை மேகமும் - நான்கு வகையான
மேகங்களும்; கீழ்விழ - (நீர்வேட்கையால்) கீழே விழுந்து விட; தூக்கினால்
அன்ன -
அம்மேகத்தைத் தூக்கி வைத்தாற் போன்ற; தோயத்தது ஆய் -
தண்ணீரை உடையதாய்; துயர் ஆக்கினான் - உலகிற்குத் துன்பம்
விளைவித்த இராவணனின்; படை அன்ன - சேனை போன்ற (கடக்க
முடியாத); அகழியை - அகழியின் அமைப்பை; வாக்கினால் -
வார்த்தைகளால்; உரை வைக்கலும் - விரித்துக் கூறவும்; ஆகுமோ -
இயலுமா.

     இது அனுமனின்எண்ணம் - படை எங்கனம் கடக்கவொண்ணாதோ
அதுபோல் அகழியும் கடக்க ஒண்ணாதது. அழச் செய்பவன் - என்னும்
பொருள்தரும் சொல் இராவணன். கம்பர், அழுகைக்கு மூலகாரணமாகிய
துயரத்தைத் தருபவன் என்றார். அளவடி
 நான்குடைக் கட்டளைக்கலிப்பா. மா
- விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். பாடலின்
முதற்சீர் நேரசையாயின் பதினோரெழுத்தும், நிரையசையாயின் பன்னீரெழுத்தும்
கொண்டு அமையும். இந்நூலில் இவ்விருத்தங்களின் தொகை 1198. (மணிமலர்
76)                                                    (149)