4984. | ஆனைமும்மதமும் பரி ஆழியும் மான மங்கையர்குங்கும வாரியும் நானம் ஆர்ந்தநறைக்குழல் ஆவியும் தேனும் ஆரமும்தேய்வையும் நாறுமால் |
(அவ்வகழி) ஆனை மும்மதமும் - யானைகள் வெளிப்படுத்தும் மூன்று மதப் புனல்களும்; பரி ஆழியும் - குதிரையின் வாயின் நுரையும்; மானமங்கையர் - பெருமைமிக்க பெண்களின்; குங்கும வாரியும் - குங்குமம் கலந்த நீர்ப் பெருக்கும்; நானம் ஆர்ந்த - நீராடும் பெண்களின்; நறை - நறுமணம் வீசும்;குழல் ஆவியும் - கூந்தலிற் பூசிய கஸ்தூரியும்; தேனும் ஆரமும் - தேனும்சந்தனமும்; தேய்வையும் - கலவைக் குழம்பும்; நாறும் - கமழும். அகழி, மும்மதம்முதலானவை மணக்கும். மகளிர் கூந்தல் மணமுடையது என்னும் இலக்கிய வழக்கு நறைக்குழல் என்று பேசச் செய்தது, கூந்தலின் நறியவும் உளவோ என்று குறுந்தொகை பேசும். ஆரம் - சந்தனம். 'கோவா மலை ஆரம் கோத்த கடலாரம்' என்று சிலம்பு பேசும். தேய்வை - குழம்பு ஆல் - அசை (150) |