5222.

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம்ஆயிரம் வல்லான், அறிவாளன்,
மெய் அன்புஉன்பால் வைத்துளது அல்லால், வினை
                                வென்றோன்
செய்யும் புன்மையாதுகொல் ?' என்றார், சிலர்
                                எல்லாம்.

     சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள் (பிராட்டியை நோக்கி;
வினை வென்றோன் -
செயலில் வெற்றி பெறும் இராவணன்; வையம் தந்த
-
உலகத்தைப் படைத்த; நான்முகன் மைந்தன் - பிரம்ம தேவனுடைய
மகனான புலத்தியனது; மகன் மைந்தன் - மகனின் (விச்சிரவசு) புதல்வன்;
ஐயன் -
தன்னிகரற்ற தலைவன்; வேதம் ஆயிரம் வல்லோன் - ஆயிரம்
வேதங்களை அறிந்தவன்; அறிவாளன் - அறிவிற் சிறந்தவன் (அவன்);
உன்பால் -
உன்னிடத்தில்; மெய் அன்பு - உண்மையான அன்பை;
வைத்துளது அல்லால் -
வைத்ததை அன்றி (அவன்); செய்யும் புன்மை -
செய்யும் இழிவு; யாது - எதுவோ; என்றார் - என்று சொன்னார்.

    உயர்குடிப்பிறப்பும், கல்வியும் பெற்றவன். உன் காரணமாக இழிதொழில்
செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் உன்பால் கொண்ட காதலே
என்று கூறி்ப் பிராட்டியை மருட்டுகின்றனர். அரக்கியர் தம்மை அறியாமல்
இராவணன் செயல் புன்மை என்கின்றனர். இராவணின் தந்தை விச்சிரவசு.
விச்சிரவசுவின் தந்தை புலத்தியன். புலத்தியன் தந்தை பிரமன். சூர்ப்பனகை,
தன்னைப் பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி என்று பேசுவதை முன்பு
பார்த்தோம் (சூர்ப்ப - 39). சாமவேதம் ஆயிரம் சாகை உடையது. ஆதலின்
அது ஆயிரவேதம் என்று சிறப்பிக்கப்பெற்றது. ஆயிரமறைப் பொருள்
உணர்ந்து அறிவமைந்தாய் என்று இராவணன் புகழப்படுவான். ஐயன் -
அழகியவன் என்பது ஏற்புடைப்பொருள் - பெண்டிர் விரும்புவது
அழகையாதலின் இராவணன் அழகன் என்று அரக்கியர் குறித்தல்
பொருத்தமன்றோ. "இன்மையும் வனப்பும்" பெண் விரும்புவது என்னும்
பெருங்கதை.                                              (154)