அனுமன் அகழியைக்கடந்து இடைநகருக்குள் தேடுதல்

4990.

அன்ன வேலைஅகழியை, ஆர்கலி
என்னவே கடந்து,இஞ்சியும் பிற்பட
துன்ன அருங்கடிமாநகர் துன்னினான்;
பின்னர் எய்தியதன்மையும் பேசுவாம்.

(அனுமன்)

     அன்ன - அப்படிப்பட்ட; வேலை அகழியை - அலையுடன் கூடிய
அகழியை; ஆர்கலி என்ன - முன்பு தாண்டிய கடலைப் போல; கடந்து -
தாவிச் சென்று; இஞ்சியும் பிற்பட - மதில் பிற்பட்டிருப்ப; துன்ன அரும் -
ஒருவரும் நெருங்கவியலாத; கடி மாநகர் - காவலையுடைய இடை நகரத்தை;
துன்னினான் - அடைந்தான்; பின்னர் - அதன்பிறகு; எய்திய தன்மை -
நிகழ்ந்த செய்தியை; பேசுவாம் - கூறுவோம்.

     அனுமன் அகழியைக்கடலைப் போலத் தாண்டி மதில் பிற்பட
இடைநகரை அடைந்தான். பின்பு நிகழ்ந்தவற்றைக் கூறுவோம். வேலை அகழி
- என்பதற்குக் கடல்போன்ற அகழி என்று கூறப்பெற்றது. கடல் போன்ற
அகழியைக் கடல்போலத் தாவினான் என உரை கூறுவதில் சிறப்பில்லை.
ஆதலின் வேலை என்பதற்கு 'அலை' என்று பொருள் கூறப்பெற்றது.
'வேலைப் புணரியம்பள்ளியம்மான் (திருவிருத்தம் 75) அன்றி 'வேலி' என்றும்
பொருள் கூறலாம்.                                            (156)