கலிவிருத்தம் 4992. | வேரியும்அடங்கின; நெடுங்கடல் விளம்பும் பாரியும் அடங்கின; அடங்கியது பாடல் காரியம்அடங்கினர்கள் கம்மியர்கள்; மும்மைத் தூரியம்அடங்கின; தொடங்கியது உறக்கம். |
(இலங்கையில்) வேரியும்அடங்கின - மது உண்போர் முழக்கம் ஒடுங்கின; நெடுங்கடல் விளம்பும் - கடலைப் போல் முழங்கும்; பாரியும் அடங்கின - பாரி வாத்தியங்களும் ஒடுங்கின; பாடல் அடங்கியது - பாடல்களும் ஒடுங்கிவிட்டது; கம்மியர்கள் - பொற்கொல்லர்கள்; காரியம் அடங்கினர் - தொழில் முடித்து ஒடுங்கி விட்டனர்; மும்மைத் தூரியம் - மூவகையான முரசங்கள்; அடங்கின - ஒடுங்கி விட்டன; உறக்கம் தொடங்கியது - தூக்கம் தொடங்கிவிட்டது. வேரி - கள்.இங்கு கள் குடிப்பவரின் முழக்கத்தைக் குறித்தது. பாரி - இராக் காவலரின் வாத்தியம். மும்மைத் தூரியம் - என்றது தியாக முரசு, வீரமுரசு, மணமுரசு என்னும் மூவகை முரசுகளை. மும்மை என்றது எண்ணப்படு பொருளாகாது மூன்று என்னும் எண்ணைக் குறித்தது. (திருக்குறள் நுண்பொருள் மாலை 23) (158) |