4994. | வடம்தருதடம்கொள்புய மைந்தர், கலவிப்போர் கடந்தனர்,இடைந்தனர், களித்த மயில் போலும் மடந்தையர்தடந்தன முகட்டிடை மயங்கிக் கிடந்தனர்;நடந்தது புணர்ச்சிதரு கேதம். |
வடம்தரு -வடங்கள்அணியப்பெற்ற; தடம்கொள் - விசாலமான; புயமைந்தர் - தோள்களையுடைய இளைஞர்கள்; கலவிப்போர் - புணர்ச்சிப்போரில்; கடந்தனர் - வெற்றியடைந்து; இடைந்தனர் - போரிலே தோல்வியுற்ற; களித்த மயில் போலும் - செருக்குற்ற மயில் போன்ற; மடந்தையர் - மகளிரின்; தடம் - விரிந்த சாரலைப்பெற்ற; தனமுகட்டிடை - முலைகளின் உச்சியில்; மயங்கிக் கிடந்தனர் - மோகித்துக் கிடந்தார்கள்; புணர்ச்சி தரு கேதம் - புணர்ச்சியால் உண்டான சோர்வு; நடந்தது - (இப்படி) நிகழ்ந்து கொண்டிருந்தது. கலவிப் போரில்வென்ற இளைஞர்கள் தோற்றவர்களின் மார்பில் துயின்றனர். கேதம் - தளர்ச்சி. (160) |