4995.

வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;
காம நறையின்திறம் நுகர்ந்தனர் களித்தார்;
பூமன் நறை வண்டுஅறை இலங்கு அமளி புக்கார்;
தூம நறையின் துறைபயின்றிலர் துயின்றார்.

     வாமம் -வாம மார்க்கத்தார் சிறப்பிக்கும்; நறையின் துறை - கள்ளின்
வகைகளை; மயங்கினர் - உண்டு மயங்கியவர்; மறந்தார் - (இன்பம்
அனுபவித்தலையும்) மறந்தார்; காம நறையின் திறம் - மன்மதன் உரைத்தபடி
அனுபவிக்கவேண்டிய; நுகர்ந்தனர் -  காமத்துறைகளாய கள்ளின்
தன்மையை; களித்தார் - மயங்கி உறங்கினர்; (அங்ஙனம் உறங்கியவர்கள்)
பூமன்நறை -  மலர்களில் நிலைபெற்றுத் தேனுண்ணும்; வண்டு அறை -
வண்டுகள் மொய்க்கும்; இலங்கு - விளக்கமான; அமளி புக்கார் -
அமளியை அடைந்தும்; தூம - வாசனைப் புகைகளுடன் கூடிய; நறையின்
துறை -
நன்மையின் வகைகளை; பயின்றிலர் - அனுபவியாது;  துயின்றார் -உறங்கினர்.

     பல்வேறுகாதலர்களின் படுக்கை அறை நிலைகளைக் குறித்தாகக்
கொள்க.                                                 (161)