4997. | விரிந்தனநரந்தம் முதல் வெண்மலர் வளாகத்து உரி்ஞ்சிவருதென்றல் உணர்வுஉண்டு அயல்உலாவ சொரிந்தனகருங்கண், வரு துள்ளிதரு வெள்ளம் எரிந்தனபிரிந்தவர்தம் எஞ்சுதனி நெஞ்சம். |
நரந்தம் முதல் -நரந்தம்முதலாகக் கூறப்பெற்ற; வெண்மலர் - வெண்மையான பூக்கள்; விரிந்தன - மலர்ந்தன; வளாகத்து - அவ்விடத்தில்; உரிஞ்சி வருதென்றல் - மலர்களை உராய்ந்து வந்த தென்றல்; உணர்வு - உணர்ச்சியை; உண்டு - கவர்ந்து; அயல் உலாவ - பக்கத்தில் இயங்க (அதனால்); கருங்கண் வரு - (கூட்டமின்மையால்) கருத்த கண்களில் வெளிப்படும்; துள்ளி - துளிகள்; தரு - தோற்றுவித்த; வெள்ளம் - நீர்ப்பெருக்குகள்; சொரிந்தன - விழுந்தன; பிரிந்தவர்தம் - காதலரைப் பிரிந்தவர்களுடைய; எஞ்சு - (நாணம் முதலானவை நீங்க) மிஞ்சியிருந்த; தனிநெஞ்சம் - தனியான உள்ளம்; எரிந்தன - (பிரிவாற்றாமல்) வெந்தன. கண்கள் சொரிந்தஅருவி நெஞ்சக் கனலை அவிக்கவில்லை. நரந்தம், புல்லென்பர் சிலர். மலர் என்பர் சிலர். அழகர், நரந்தநறுமலர் என்னும் பரிபாடலுக்கு (பரி 16 - 14 - 15) நரந்தம் போலும் நறியமலர் என்றார். இனியர், 'நரந்தம் நாறிருங்கூந்தல்' என்னும் குறிஞ்சிக் கலிக்கு (குறிஞ்சி 18 - 5) நரந்தம் பூ நாறும் கரிய கூந்தல் என்று உரை வகுத்தார். கவிச்சக்கரவர்த்தி' வெண்மலர்' என்றதால் இனியரை ஆதரித்தனர் போலும். (163) |