5002. | முயல்கருங்கறை நீங்கிய மொய்ம்மதி அயர்க்கும்வாள்முகத்து ஆர்அமுது அன்னவர் இயக்கர்மங்கையர் யாவரும் ஈண்டினார் நயக்கும் மாளிகைவீதியை நண்ணினான்.* |
(அனுமன்) முயல் - முயலாகிய;கருங்கறை - கறுத்த களங்கம்; நீங்கிய - இல்லாத; மொய்மதி - பூரண சந்திரனை; அயர்க்கும் - ஒத்திருக்கும்; வாள்முகத்து - ஒளிமிக்க முகத்தை உடைய; ஆர் அமுது அன்னவர் - அரிய அமுதம் போன்ற; இயக்கர் மங்கையர் யாவரும் - எல்லா யட்சப் பெண்களும்; ஈண்டினார் - நெருங்கியிருந்து; நயக்கும் - விரும்பியிருக்கும்; மாளிகை வீதியை - மாளிகை நிரம்பிய வீதியை; நண்ணினான் - அடைந்தான். களங்கம்நீங்கிய முழுமதி போன்ற முகத்தை உடைய யட்சப் பெண்கள் வாழும் வீதியை அனுமன் அடைந்தான். அயிர்த்தல் - என்னும் வினைச்சொல் உவம உருபுப் பொருளைத் தந்தது. எல்லாவினைச் சொற்களும் உவம உருபு போல அமைவதை அறிக. இதனை இனியர் உவம வாசகம் என்பர்.(சிந்தா. 10.) (168) |