5004.

அத்திரம்புரை யானை அரக்கன் மேல்
வைத்தசிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர்
பத்திரம் புரைநாட்டம் பதைப்பு அற
சித்திரங்கள்என இருந்தார் சிலர்.

     சிலர் - சிலயட்ச மகளிர்;அத்திரம் - மலையை; புரை - ஒத்த;
யானை அரக்கன் மேல் -
 யானையை உடைய இராவணன்பால்; வைத்த -
நிறுத்திய; சிந்தையர் - மனத்தைப் பெற்றவராய்; வாங்கும் உயிர்ப்பிலர் -
உள்ளே நுழையும் மூச்சற்று; பத்திரம் புரை - அம்பைப் போன்ற;  நாட்டம்
-
கண்கள்; பதைப்பு அற - இமைத்தல் இன்மையால்; சித்திரங்கள் என -
ஓவியங்களைப் போல; இருந்தார் - அமர்ந்திருந்தனர்.

     சிந்தை ஒன்றன்பால்பதிந்தால் மூச்சும் கண்களும் தம் இயல்பை
மறக்கும். 'யானை போலும் இராவணன்' என உரை கூறல் ஆகாமை. 'மலை
போலும் யானை போலும் உவமை' என வந்து உவமைக்குவமை என்னும்
குற்றம் வருதலின்.                                            (170)