5008. | ஈரத்தென்றல் இழுக, மெலிந்து தம் பாரக்கொங்கையைப் பார்த்தனர்;பாதகன் வீரத்தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர் சோரச் சோரத்துளங்கு கின்றார் சிலர்.* |
சிலர் - வேறு சில யட்சப் பெண்கள்; ஈரத் தென்றல் - குளிர்ந்த தென்றற் காற்று; இழுக - உராய (அதனால்); மெலிந்து - இளைத்து; தம் - தம்முடைய; பாரக் கொங்கையை - பாரமான தனங்களை; பார்த்தனர் - பார்த்து; பாதகன் - இராவணனின் ; வீரத் தோள்களின் - வீரம் மிக்க தோள்களினுடைய; வீக்கம் நினைந்து - கருவத்தை எண்ணி; உயிர் சோர சோர - உயிர் மிகத் தளர்ச்சியடைய; துளங்குகின்றார் - கலக்கம் அடைகின்றனர். பாரமானகொங்கைகட்கும், கருவம் உற்ற தோள்களுக்கும் இடை நின்று யட்ச மகளிர் கலங்குகின்றனர். பிரிவுக் காலத்து மகளிர் கொங்கையை வெறுப்பர். 'வாரிய பெண்ணை' என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலைப் பார்க்கவும். (174) |