5018. | உழை உழைப்பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக் குழைமுகத்து ஆயம்தந்த புனல்குளிர்ப்பு இலஎன்று ஊடி இழைதொடுத்துஇலங்கும் மாடத்து இடைதடு மாறஏறி மழை பொதுத்துஒழுகு நீரால் மஞ்சனம்ஆடு வாரும். |
உம்பர் நாட்டு -விண்ணுலகத்தைச் சார்ந்த; குழை முகத்து ஆயம் - காதணியணிந்த முகத்தை உடைய மகளிர்; உழை உழை - (ஆகாயத்தில்) இடங்கள் தோறும்; பரந்த - பரவியுள்ள; வான யாற்று நின்று - ஆகாய கங்கையிலிருந்து; தந்த புனல் - கொண்டு வந்த தண்ணீர்; குளிர்ப்பு இல - குளிர்ச்சியில்லாதன; என்று - என்று கருதி; ஊடி - அவற்றை வெறுத்து; இழை தொடுத்து - ஆபரணங்கள்தொடுக்கப்பெற்று (அதனால்); இலங்கும் மாடத்து - விளங்கும் உப்பரிகையில்; இடை - இடையானது; தடுமாற - வருத்தம் அடைய; ஏறி - ஏறிப் போய்; மழை - மேகத்தை; பொதுத்து - துளையிட்டு; ஒழுகும் நீரால்- பொழியும் நீர்ப்பெருக்கால்; மஞ்சனம் ஆடுவாரும் - நீராடுகின்றவர்களும். யாற்று நீரினும்மேகநீர் குளிர்ச்சியுடையது 'மந்தி... சுனைநீர்... குளிர்ந்தில என்று ஊடி.... கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே' (ஈங்கோய் 19) இரணியவதைப் படலத்தும் இந்தக் கருத்துப் பேசப்படுகிறது. அங்கு கொண்டல் நீரினும் புறக்கடல் நீர் குளிர்ந்தது என்று பேசப்பட்டது (கம்ப. 6192) (184) |