5021.

ஆணியின்கிடந்த காதல்
     அகம்சுடஅருவி உண்கண்
சேண்உயர்உறக்கம் தீர்ந்த
     சிந்தையர்செய்வது ஓரார்,
வீணையும் குழலும்,தம்தம்
     மிடறும்வேற்றுமையின் தீர்ந்த
பாணிகள் அளந்த பாடல்
     அமிழ்துஉகப் பாடுவாரும்.

     ஆணியின் -தைக்கப்பெற்ற ஆணியைப் போல; கிடந்த -
தங்கியிருக்கின்ற; காதல் - காதலானது; அகம் சுட - (இராவணனை வெறுத்த)
உள்ளத்தை வருத்த; அருவி உண்கண் - அருவி போன்ற கண்களையும்;
சேண் உயர் - மிகவுயர்ந்த; உறக்கம் தீர்ந்த - உறக்கம் விலகப் பெற்ற;
சிந்தையர் - உள்ளமும் உடையவராய்; செய்வது ஓரார் -
செய்யத்தக்கவற்றை அறியாது; வீணையும் - வீணையின் ஓசையும்; குழலும் -
குழலின் ஓசையும்; தம்தம் மிடறும் - தங்களுடைய குரலும்; வேற்றுமையின்
தீர்ந்த -
வேறுபாடு இல்லாததும்; பாணிகள் - தாளத்தால்; அளந்த பாடல் -வரையறுக்கப்பட்டதும் ஆகிய பாடல்களை; அமிழ்து உக - அமிழ்தம்
சிந்தும்படி; பாடுவாரும் - பாடுகின்றவர்களும்.

     காதல் அகம்சுடவும், இசை வழாமற் பாடுவது சிறப்பு. அருவி உண்கண்
என்பதில் உள்ள உண் என்பது உவம வாசகம் - சேல் உண்ட ஒண்கணார்
என்று நாட்டுப் படலம் பேசும் (நாட் - படலம் 13) பாணி - தாளம். அளந்த -
வரையறுத்த.                                              (187)