5025. | இத்திறத்துஅரக்கி மார்கள் ஈர்-இருகோடி ஈட்டம் பத்தியர்உறையும் பத்திப் படர்நெடுந்தெருவும் பார்த்தான்; சித்தியர்உறையும் மாடத் தெருவும்பின் னாகச் சென்றான்; உத்திசை விஞ்சைமாதர் உறையுளைமுறையின் உற்றான். |
(அனுமன்) இத்திறத்து -இப்படிப்பட்ட; ஈர் இரு கோடி ஈட்டம் - நான்கு கோடிஎன்னும் தொகையுள்ள; அரக்கிமார்கள் - அரக்க மகளிர்; பத்தியர் - (இராவணன்பால்) காதலுடையவராய்; உறையும் - தங்கியுள்ள; படர் - விரிந்த; பத்தி - வரிசையான; நெடும் தெருவும் - நீண்ட தெருக்களையும்; பார்த்தான்- (பிராட்டியைத் தேடிப்) பார்த்து விட்டு; சித்தியர் - சித்தர்குலப் பெண்கள்; உறையும் - தங்கியிருக்கும்; மாடம் - மாடங்களைப்பெற்ற; தெருவும் - தெருக்களும்; பின் ஆக - பிற்பட்டிருக்க; சென்றான் - தேடிச்சென்று (பிறகு); உத்திசை - இடைப்பட்ட திசையில்; விஞ்சை மாதர் - வித்தியாதர மகளிர்; உறையுளை - தங்கும் வீடுகளை; முறையின் உற்றான் - முறைப்படி அடைந்தான். பத்தியர் -காதலுடையவராய் 'எரிசுடர்' என்னும் பாடல் முதல் 'தயிர் நிறம்' என்னும் பாடல் ஈறாகப் பேசப்பட்டவர் அரக்கியர்கள். (191) |